எழுவோம் எழுவோம்
மரணித்த தேசத்தில்
வித்தாகிப் போன
விருட்சங்களே !
மீண்டெழுவோம் மீண்டெழுவோம்
விதைகளாய் வீழ்ந்து துளிர்த்தெழும்
மாவீரர்களே !
துச்சமாக எண்ணி நம்மை
வேரறுத்த தீவினில்
அச்சமின்றி முளைத்தெழுவோம்
ஆல அமர அடி வேர்களாய் !
போர் கண்ட நாட்டில்
போராடி மாய்ந்த
எம் மக்களை போற்றவே
பொங்கி எழுவோம்
ஆழிப் பேரலையாக !
வீர பூமியிலே விதைக்கப்பட்ட
எம் மக்கள் கனவு
நனவாகும் ஒரு நாள் ,
அந் நாள் எம் நலனுக்காய்
உயிர் தந்த வீரர்களை
போற்றும் திரு நாள்
தலை முறைகள் பல கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
தாய் பாலை விட நாம் அதிகம்
பருகியது மாவீரர்களின்
பராக்கிரமங்களையே !
விதைத்தது நெல்லாய் இருக்கையில்
எப்படி முளைக்கும் இங்கே கள்ளி?
சிந்திய குருதியின் சூடு தனியாத பூமியில்
சீக்கிரமே தனியும் எம் சுதந்திர தாகம்
பல காலம் நொந்தே போனோம்
பலர் உடல் வெந்தே சாய்ந்தோம்
இருப்பினும் இனி ஒன்றாய் நின்று
சரித்திரம் பேச வென்றே வாழ்வோம் !
அலையாய் வந்து ,
விதையாய் வீழ்ந்து,
மீண்டும் எழுந்து,
மாவீரர் செயல் போற்றி
வெற்றியை பருகுவோம் !
-:சம்யுக்தா:-